6 ஜூன், 2012

படைப்புக்கு மரியாதை!

தினமணி தலையங்கம்: படைப்புக்கு மரியாதை! 
First Published : 25 May 2012 01:50:14 AM IST

நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோருக்கு 2012ஆம் ஆண்டு நல்ல காலம் பிறந்திருக்கிறது. படைப்புரிமை சட்டத் திருத்தம்-2012 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுமனதாக நிறைவேறியுள்ளது. திரைப்படத் துறையினரின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம் இது. இதில் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரே விஷயம், இந்த நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் தங்கள் படைப்புக்கு உரிமையாளர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதுதான்.

திரைத்துறையில் ஒரு நடிகர் நடிக்கவும், பாடலாசிரியர் பாட்டு எழுதித் தரவும், இசையமைப்பாளர் இசை அமைத்துக் கொடுக்கவும் அவர்கள் கேட்கும் தொகை தயாரிப்பாளரால் அளிக்கப்பட்டுவிடுவதால், அது தொடர்பாக எந்த உரிமையும் படைப்பாளிகள் அல்லது நடிகர்களுக்கு இல்லை என்பதுதான் படைப்புரிமைச் சட்டம் 1957-ன்படி நடைமுறையாக இருந்தது. இப்போதைய சட்டம் இந்த நடைமுறையில் சிறு திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. திரைப்படத் தயாரிப்பாளர் அந்த திரைப்படத்துக்கு மட்டுமே உரிமை படைத்தவர். அதே திரைப்படம், வானொலியில், தனியார் அல்லது அரசு தொலைக்காட்சியில், இணையதளத்தில், குறுந்தகடுகள் மூலமாக கேபிள் டி.வி.க்களில், சிறு பகுதியாக அல்லது முழுமையாக அல்லது பாடல் மட்டும் என எந்த வகையில் வெளியானாலும், அதற்கான உரிமத்தொகை (ராயல்டி) பெறுவதற்கு இந்தக் காட்சி, பாடல் அல்லது இசைக்குச் சொந்தக்காரர்கள் உரிமை பெற்றவர் ஆகிவிடுகின்றனர்.

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், ஒரு கலைஞன் அல்லது கவிஞன், இசைஞன் காலத்தால் கைவிடப்பட்டாலும், அவன் படைப்பு உயிர்ப்புடன் இருக்கும்வரை அக் கலைஞனுக்கு உரிமத் தொகை மிகச்சிறிய அளவாக இருந்தாலும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்தச் சிறந்த கலைஞன் வறுமையில் சாகமாட்டான். திரைப்படத் துறையில் பணியாற்றியவர்களால் எழுத்துலக படைப்பாளிகள் போல, உரிமத்தொகை பெற முடியாமல் இருந்துவந்த நிலைமை இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.

திரைப்படங்களைப் பொருத்தவரை, அதன் தயாரிப்பாளர் மட்டுமே உரிமை படைத்தவர் என்பதால், அந்தத் திரைப்படம் எத்தனை முறை, எத்தனை தியேட்டர்களில் ஓடினாலும் அவருக்குத்தான் லாபம். அந்தப் படத்தை சில ஆண்டுகள் கழித்து ரீ-பிரிண்ட் போட்டு ஓட்டினாலும் அவருக்கே அந்த லாபம் முழுவதும்.

உதாரணமாக, "கர்ணன்' படத்தை டிஜிட்டலாக மாற்றினாலும் அதன் உரிமை அதன் தயாரிப்பாளருக்கே சொந்தம். அல்லது தயாரிப்பாளரிடமிருந்து உலக விநியோக உரிமையை முழுவதுமாகப் பெற்ற விநியோகஸ்தருக்குச் சொந்தம். இதுதான் இன்று வரை உள்ள நிலைமை. இனி அப்படியல்ல. ஒரு படத்தை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றினாலும், கருப்பு - வெள்ளைப் படத்தை வண்ணமாக மாற்றினாலும், இணைய தளத்தில் வெளியிட்டாலும், அதாவது, திரைக்கு வெளியே எந்த வடிவம் கொண்டாலும், மாற்றம் பெற்றாலும், அதில் தொடர்புடைய கலைஞர்கள் உரிமத்தொகை பெறும் தகுதியுடைவர்கள் ஆகிறார்கள்.

வானொலி, தூர்தர்ஷனில் ஒலி, ஒளிபரப்பாகும் திரைப்பாடல்கள், ஒலிச் சித்திரம், திரைப்படம், நகைச்சுவைத் துணுக்குகள் குறித்து அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் ஆகியன கணக்கு வைத்திருக்கின்றன. இவை பயன்படுத்தப்பட்ட மணித்துளிகளுக்கேற்ப, அதன் தயாரிப்பாளர்களுக்குக் காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசின் இந்த இரு நிறுவனங்களும் பாராட்டுக்குரியவை.

தனியார் தொலைக்காட்சிகள் ஆதிக்கம் பெருகிய பின்னர், படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் தனியார் தொலைக்காட்சிகளே வாங்கி, அப்படத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் - பாடல், நகைச்சுவைக் காட்சி அல்லது முழு திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும், தங்கள் துணை சேனல்களிலும் ஒளிபரப்பும் புதிய வணிக முறை தோன்றியது.

ஒரு படத்தின் தயாரிப்புச் செலவு ரூ.80 கோடி என்றாலும், அந்தப் படத்தை ரூ.100 கோடிக்கு வாங்கி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது அவர்களுக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பல கோடி ரூபாய். இரண்டு ஒளிபரப்பில் இந்த ரூ.100 கோடியை மீட்டுவிட முடியும். ஆகவே, ஒரு படத்தின் பல காட்சிகளை, பாடலை பலமுறை ஒளிபரப்பி, விளம்பரங்கள் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்கத் தனியார் தொலைக்காட்சிகளால் முடிந்தது.

தற்போது இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்திருப்பதன் மூலம், அத்தகைய தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தாங்களே அந்தப் படத்துக்கு உரிமை பெற்றவர்களாக இருந்தாலும்கூட, அதைத் திரையரங்கு அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்துவதால், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு உரிமத் தொகை தந்தே ஆக வேண்டும்.

இவ்வாறு திரை அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்தப்படும்போது, அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப, அதில் தொடர்புடைய கலைஞர்களுக்கும் தரப்பட வேண்டிய உரிமத் தொகையை காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிர்ணயம் செய்யும்போது, தொலைக்காட்சிகளைப் பொருத்தவரை, அக்காட்சிகள் இடம்பெறும் ஸ்லாட்-ன் மொத்த விளம்பர வருவாயையும் கணக்கில்கொண்டு அதற்கேற்ப உரிமத்தொகையை (ராயல்டி) நிர்ணயிக்க வகை செய்தால், கலைஞர்களுக்கு ஓரளவு நியாயமான உரிமத்தொகை கிடைக்கும்.

படங்களை ரீ-மேக் செய்யும்போதும், பாடல்களை ரீ-மிக்ஸ் செய்யும்போதும்கூட தொடர்புடைய கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்களின் அனுமதி பெறவும் உரிமத்தொகை தரவும் வேண்டும் என்கின்றது சட்டம். திரைத்துறையினரை மனதில் கொண்டே இந்தச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்திற்குப் பெயர் வைப்பதிலிருந்து புதிய கதை கருவைத் தேடிப்பிடித்துப் படமாக்குவது வரை, கற்பனை வறட்சி ஏற்பட்டிருக்கிறது. புதிய கதையைப் படமாக்கும் துணிவு இல்லாத போக்கு தலைதூக்கி இருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் வந்திருப்பது சுயசிந்தனையாளர்களின் திறமைக்குத் தரப்படும் மரியாதை. இருப்பினும் திரைத்துறையினரின் ஒற்றுமை மட்டுமே இந்தச் சட்டத்தை வலுவாக்கும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

6 மார்ச், 2012

சிறந்த நூலாசிரியர்களுக்குப் பாராட்டு


சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பவித்ரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறந்த அறிவியல் மற்றும் ஆன்மிக தமிழ் நூல்களுக்கு "ராமமூர்த்தி நினைவு விருது' பெற்றவர


சென்னை, மார்ச் 5: சிறந்த நூலாசிரியர்களுக்குப் பாரட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறந்த நூல்களை தேர்வு செய்து அதன் ஆசிரியர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. ஆர்.வி.பதியின் "மனதை மயக்கும் கண்ணனின் கதைகள்', ஜெ. வீரநாதனின் "எளிய தமிழில் இணையத்தை அறிவோம்', பி. முத்துகுமாரசுவாமியின் "நகரத்தார் கோயில்களில் ஒன்பது', வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் "எல்லோருக்கும் எப்போதும் உணவு' ஆகிய நூல்கள் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியர்களுக்கு "ராமமூர்த்தி நினைவு' விருதுகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி, இந்தியா சிமெண்ட் நிறுவன துணைத் தலைவர் (நிதி) ஹரிஹர சுப்பிரமணியன், பவித்ரம் நிர்வாகி எஸ்.எஸ்.ஆர். ராஜ்குமார், கெüரவ ஆலோசகர் டாக்டர் ஜெ. ஜாய்ஸ் திலகம், நாடக ஆசிரியர் சி.வி. சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






1 பிப்ரவரி, 2012

கணினி வரைகலை - பயிற்சியும் வேலை வாய்ப்பு

கணினி வரைகலை - பயிற்சியும் வேலை வாய்ப்பு

தொடக்கம்


கற்காலத்தில் குகைகளில் வசித்த போதே குகைச் சித்திரங்களாக வரைந்து தகவல் பரிமாற்றத்தை மனித இனம் துவக்கியது. சிந்தனை வளர்ந்து செயலாக மாறியபோது ஏராளமான வெளிப்பாடுகள் கண்டுபிடிப்புகளாகக் கிடைத் தன. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்திய நாகரீகம் முதன்முதலாக குறியீடுகளாக எழுத்துக்களை அறிமுகம் செய்தது.


வளர்ந்த நதிக்கரை நாகரீகங்கள் வாய்வழி ஓசைகளை எழுத்துக்களாக வடிவமைத்தன. எண்ணங்களை எழுத்துக் களாகப் பதிவு செய்ய பனை ஓலை, சுடுகற்கள், பாறைகள், துணி, மரத் துண்டுகள் போன்ற அன்றைய நாட்களில் அருகில் எளிதில் கிடைத்தப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.


சீனர்கள் கண்டுபிடித்த காகிதம் அச்சுக்கலை உருவாகி வளர வழிசெய்து. ஒட்டுமொத்தமாக மரக்கட்டைகளில் செதுக்கப்பட்டு பக்கங்கள் அச்சிடப்பட்டன. 15ஆம் நூற்றாண்டு வரையிலும் புழக்கத்திலிருந்த இந்த முறை, ஜெர்மானிய கலைஞர் ஜேஹன்னஸ் கூட்டன்பர்க் என்பவரின் ஈடுபாட்டால் மாற்றம் அடைந்தது. அவர் கண்டுபிடித்து உலகிற்களித்த பிரித்தெடுத்து அடுக்கும் அச்சுமுறை சுமார் 500 ஆண்டு காலம் அச்சுத்துறைக்கு மிகப் பெரிய உதவியாக அமைந்தது. லெட்டர் பிரஸ் என்று குறிப்பிடப்படும் இந்த அச்சுக்கோர்க்கும் முறை இன்றும்கூட புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


கணினியின் வருகை


அச்சுத்துறையில் ஏற்பட்ட மாற்றங்களினால் அதன் மூலம் கிடைத்த புத்தகங்கள் எளிய மக்களையும் சென்றடைந்தது. அதனால் அறிவுப் பரிமாற்றம் விரைவாக நடந்தது; ஆராய்ச்சிகள் பெருகின; அறிவியல் வளர்ந்தது; அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளமாக வெளிவந்தன.


கணக்கியலின் வளர்ச்சியால் கணினி இயல் தோன்றியது. மனித அறிவிற்கும் ஆற்றலுக்கும் உதவும் விதமாக கணினி தொழில்நுட்பம் எல்லாத்துறைகளிலும் பரவியது; பலன் தந்தது. 80களின் இறுதியில் டெஸ்க் டாப் பப்ளிஷர் என்ற வகைப்பாட்டில் கணினிகள் அச்சுத்துறைக்கு அறிமுகம் ஆயின.


அச்சுக்கோர்ப்பாளர், அச்சிடுபவர், வரைகலைஞர், வடிவமைப்பாளர், வெட்டி ஒட்டுபவர், பிழை திருத்துநர், ஓவியர் என்று பல்வேறு நபர்களின் கூட்டு முயற்சியாலும், உழைப்பாலும் செய்யப்பட்ட வேலைகள், கணினி வரைகலைஞர் என்ற ஒரே ஒரு நபரால் உருவாக்கப்படும் நிலை ஏற்பட்டது.


வரைகலையில் கணினிகள்


80களில் வெளிவந்த கணினிகளில் கொள்ளவு என்பது வெறும் 80 எம்பியில் மட்டுமே இருந்தன. ஆனால் அவற்றுடன் ஒப்பிடமுடியாத அளவிற்கு இன்று கணினிகள் கொள்ளவிலும், ஆற்றலிலும், செயல்பாட்டிலும், கொடுக்கும் வெளிப்பாடுகளிலும் பெரிய மாற்றங்களுடன் கிடைக்கின்றன.


உடல் போன்று திகழும் கணினிகளுக்கு உயிராக அமைந்துள்ளவை, கண்ணால் பார்க்க முடியாத, தொட்டுணர முடியாத மென்பொருட்களே. இந்த மென்பொருட்களின் தன்மையினாலேயே அச்சுத் துறையில் வடிவமைப்பிற்காக பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு டெஸ்க் டாப் பப்ளிஷர் என்ற சிறப்புப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் அவை பெரிசனல் கம்ப்யூட்டர் - பீசி என்றே குறிப்பிடப்படுகின்றன.


கணினி வரைகலை


அச்சு, விளம்பரம், பதாகைகள், புத்தகப் பதிப்பு மற்றும் ஒளிப்படத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் அடிப்படையாகத் திகழ்வது வரைகலை வடிவமைப்பாகும். பெரும்பாலும் வெறும் எழுத்துக் களால் உருவாக்கப்படும் புத்தகங்கள் உருவாக்கம் முதல், எழுத்துக்கள், வண்ணங்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சிக்கலான முறையில் உருவாக்கப்படும் பதாகைகள் வடிவமைப்பு வரையிலும் கணினியும் அதில் நிறுவப்படும் மென்பொருட்களுமே பயன்படுத்தப்படுகின்றன.


காகிதம், அட்டை, வண்ணக்கலவைகள், தூரிகை, எழுதுகோல்கள், கத்தி, கத்தரிக்கோல், அழிப்பான் உள்ளிட்ட வரைகலைக் கருவிகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன. இத்தனை கருவிகள் செய்த வேலைகளை கணினியுடன் இணைக்கப்படுகின்ற மவுஸ் என்றழைக்கப்படும் சுட்டுக்கருவிகள் துல்லியமாக செய்து முடிக்க உதவுகின்றன.


கணினி வரைகலை மென்பொருட்கள்


கணினி வரைகலை என்பது பல்வேறு வகைகளில் உள்ளது. புத்தக வடிவமைப்பு என்பது எழுத்துக்கள் அதிகமாகவும குறைவான படங்களுடனும் உள்ளது. புகைப்படத்துறை என்பது இதற்கு எதிர்மறையாக செயல்படுகிறது. அங்கு எழுத்துக்கள் என்பது அரிதாக உள்ளது. பதாகைகள் வடிவமைப்பு என்பதோ எழுத்துக் கள், வண்ணங்கள், கோட்டுப்படங்கள், ஒளிப்படங்கள் என்று பல தரப்படவைகளின் கலவையாக உள்ளது.


இப்படி பலதரப்பட்ட செயல்பாடுகளைக் கொண்டுள்ளதால் கணினி வரைகலையில் பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. இன்டிசைன், போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், கோரல்டிரா என்ற பல்வேறு மென்பொருட்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவையெல்லாம் விலை கொடுத்து வாங்க வேண்டியவையாகும்.


இவையல்லாமல், இலவசமாக, இவை போன்றே செயல்பாடுகளைக் கொண்ட மென்பொருட்களும் இணையத்தில் கிடைக்கின்றன. தேவையெனில் இவற்றை பதிவிறக்கம் செய்து நமது கணினிகளில் நிறுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவையும் பயன்பாடும்


எழுத்து என்பதில் புழக்கத்தில் உள்ள எல்லா இடங்களிலும் இன்று கணினி வரைகலை என்பது மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. சிறிய துண்டுப் பிரசுரங்கள், அறிவிப்புகள் முதல் பல நூறு பக்கங்களைக் கொண்ட புத்தகம் வரையிலும் இன்று கணினிகள் வழியாகவே உருவாக்கப்படுகின்றன.


இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அறிவுடன் தொடர்புகொண்ட ஒவ்வொரு இடத்திலும் கணினி வரைகலையின் வெளிப்பாடு உள்ளதைப் பார்க்க முடிகிறது. இதனால் இதன் பயன்பாடு என்பது தவிர்க்க இயலாதவை என்ற பட்டியலில் சேர்ந்துவிட்டது என்றும் கூறலாம்.


பயிற்சி


இந்தக் கணினி வரைகலை என்பது பல்வேறு தரத்தில் உள்ளது. அடிப்படை என்று பார்த்தால் கணினிக்குள் எழுத்துக்களை உள்ளீடு செய்யும் செயல் என்பதாகும். இதற்குக் குறிப்பிட்ட மொழியில் தட்டச்சு செய்யத் தெரிந்திருந்தாலே போதும். அதே சமயம் சிக்கலான வடிவமைப்பைக் கொண்டுள்ள வேலைகளை எடுத்துப்பார்த்தால், அவற்றில் எழுத்துக்களை உள்ளீடு செய்வது மட்டுமல்லாது வேறு பல செயல்பாடுகளும் இருப்பதை அறியலாம்.

கற்பனை வளத்துடன், எழுத்துரு அறிவு, வண்ணங்கள் மற்றும் அவற்றின் கலவை முறைகள் பற்றிய அறிவு, வடிவமைப்பு, படங்கள் மற்றும் ஒளிப்படங்கள் பற்றிய அறிவு போன்றவை அந்தக் கணினி வரைகலை வடிவமைப்பாளருக்கு இருந்திருப்பதை அறியலாம்.
ஆம், தட்டச்சு என்பதுடன் ஈடுபாட்டுடன் கூடிய கற்பனை வளமும், கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால் கணினி வரைகலையில் சாதனைகள் புரியலாம்.

இந்தக் கணினி வரைகலையில் பயிற்சி எடுப்பதற்கு, கல்வியறிவு - அதாவது பள்ளி, கல்லூரிகளில் படித்துப் பெற்ற அறிவு - என்பது வரைமுறைக்கு உட்பட்டது அல்ல. எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலே போதும்.


ஆங்கில அறிவும், கணினித் தொழில்நுட்பமும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அடிப்படை ஆங்கிலச் சொற்களும், ஆங்கில எழுத்துக்களும் படிக்கத் தெரிந்திருந்தால் மட்டும் போதும். இதுவும் வரைகலைஞர் பயன்படுத்தும் மென்பொருளின் அடிப்படையில் மட்டுமே தேவையாகும்.


கணினி தொழில்நுட்பம் என்பதும் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. சமையல் செய்ய விரும்புவர்க்கு, விவசாயமோ, விவயசாத் தொழில்நுட்பமோ தெரிந்திருக்க வேண்டியதில்லை அல்லாவா! விளைந்த பொருட்களின் தன்மையும் பயன்பாடும் பற்றி அறிந்திருந்தால் போதும் தானே.


வேலை வாய்ப்புகள்


கட்டுப்பாடற்ற சம்பளத்தைக் கொடுப்பதாகக் கூறப்படும் கணினித்துறைக்குள் நுழைவதற்கு அத்தனை பேரும் விரும்புகின்ற காலம் இது. ஆனால் கணினித் தொழில்நுடப் பிரிவுகளில் மேல்நிலை படிப்பு முடித்தவர்கள் அனைவருமே அந்த உச்சியை அல்ல, துவக்கத்தைக்கூட அடைய முடிவதில்லை.
ஆனால் அந்த உச்சியை அடைந்துள்ள மிகக் குறைந்த சதவீத மக்களைப் பார்த்து எல்லோரும் ஆசைப்படுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கணினியில் மென்பொருள்துறை தவிர்த்து மேலும் பல பகுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்றான இந்த கணினி வரைகலைப் பகுதியில் தேவையும் வாய்ப்பும் மிக அதிகமாகவே உள்ளது.

தமிழ் மொழியில் தட்டச்சு மட்டுமே பழகியுள்ளவர்கள்கூட இந்தத் துறைக்குள் எளிதாக நுழைந்து விடலாம். சரியாகச் சொல்லப்போனால் இவர்களுக்கு வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது. பிறகு தங்களது முழுமையான ஈடுபாட்டுடன் இதில் சிறப்பாக செயல்படலாம்.

பெருநகரங்களில் மட்டுமல்லாது சிறிய கிராமங்களிலும் கணினி வரைகலைஞர்களின் தேவை அதிகமாகவே உள்ளது. கிராமங்களில் இதனை பயிலுபவர்களுக்கு அங்கேயே வேலை வாய்ப்பு கிடைக்கிறது; சொந்தமாக தொழில் துவங்கலாம். அல்லது அருகில் உள்ள நகரங்களில் வேலை கிடைக்கிறது.

பயிலும் முறைகள்


இந்தக் கணினி வரைகலையை மிகவும் எளிதாகப் பழக முடிகிறது. அதற்கான வழிமுறைகள் :

1. தமிழ் தட்டச்சு மட்டும் அறிந்துள்ள நிலையில் தரவு உள்ளீடு செய்யும் பணியில் சேர்ந்து, படிப்படியாக கணினி வரைகலையைப் பழகிக் கொள்ளலாம். இதற்கு வேலை செய்யும் இடத்தைப் பொறுத்து 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரையிலும் ஆகலாம்.

2. கணினி வரைகலையைப் பயிற்றுவிக்கும் தரமான பயிலகத்தில் சேர்ந்து பழகிக் கொள்ளலாம். எனினும் சொல்லிக் கொடுக்கும் பயிலகத்தின் தரத்தைப் பொறுத்து பயிலுபவரின் செயல்பாடுகள் அமையும். 3 முதல் 6 மாதங்களுக்குள் தேர்ச்சி பெறலாம்.

3. எளிய தமிழில் கணினி வரைகலையைச் சொல்லித்தரும் குறுவட்டுக்கள் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்திப் பழகலாம். பயிலுபவரின் ஈடுபாட்டைப் பொறுத்து கால அளவு மாறுபாடு அடைகிறது.

4. எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் மூலமாகவும் கணினி வரைகலையைப் பயிலலாம். இதுவும் மேலேச் சொன்னபடி காலவரையறைக்கு உட்பட்டது அல்ல.

பயில வேண்டும் என்ற ஆர்வம், முயற்சி இருந்தால் இந்த கணினி வரைகலையைப் பயின்று விடலாம். இன்று நீங்கள் படிக்கும் இந்தப் புத்தகத்தை உருவாக்கியதும் சில கணினி வரைகலைஞர்களின் உழைப்புதான் என்பதை அறிவீர்களா!

தயக்கம் வேண்டாம்


கணினி தொழில்நுட்பம் என்றதும் நம்மவரிடையே ஒரு தயக்கம் உள்ளது. நேரடியாக கணினி தொழில்நுட்பம் அல்லாமல், கணினியை பயன்படுத்தி செயல்படும் கணினி வரைகலை போன்ற பல துறைகள் உள்ளன. எனினும் இந்த கணினி வரைகலையைப் பொறுத்தமட்டில், விருப்பத்துடன் கூடிய எவர் வேண்டுமானாலும் நுழையும் அமைப்புடன் திகழுகின்றது; அத்துடன் ஈடுபாட்டுடன் செயல்படுபவர்களுக்கு உறுதியான வேலை வாய்ப்பையும் அதனைத் தொடர்ந்து சுயமாகத் தொழில் தொடங்கும் நல்ல வாய்ப்பையும் தருகின்றது.

10வது, +2 படித்தவர்கள் மட்டுமல்ல பட்டதாரிகளும்கூட இந்தப் பகுதியில் சிறப்பாக செயல்பட முடிகிறது.

தமிழ் மட்டுமே அறிந்த நாம் கணினி வரைகலையில் வெற்றி பெற முடியுமா? என்ற தயக்கமின்றி துவங்குங்கள். தொழில்நுட்பமும், அறிவியலும், வாணிபமும் தமிழருக்குப் புதியதன்று. மற்றவர்கள் கற்கத் துவங்கியபோது நாம் கற்றுக் கொடுக்கும் நிலையிலேயே இருந்துள்ளோம். எந்தத் தொழில்நுட்பத்தையும் எளிதில் கற்கும் ஆற்றல் நமக்குண்டு. அத்துடன் 64 கலைகளை வளர்த்துவரும் நாடு இது. இந்தக் கலையையும் சிறப்பாக வளர்த்து வருகிறது.

விருப்பத்துடன் வாருங்கள்; சிறப்பாக செயல்பட்டு வளரலாம்; வாழ்த்துக்கள்.


ஜெ. வீரநாதன்
பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்

மின்னஞ்சல் : veeranathan@yahoo.com

நன்றி : தமிழர் கண்ணோட்டம், பொங்கல் மலர், ஜனவரி 2012

10 நவம்பர், 2011

ஏன் இன்டிசைன்...?

ஏன் இன்டிசைன்...?

கணினி வரைகலையில் குறிப்பாக புத்தக வேலைகளுக்கான பக்க வடிவமைப்பிற்காக பயன்பாட்டில் இருந்துவந்த, தற்போதும் பயன்படுத்திக் கொண்டுள்ள அடோபி நிறுவனத்தின் பேஜ்மேக்கர் மென்பொருளில், ஏராளமான குறைபாடுகள் உள்ளன. இவற்றையெல்லாம் களைந்து, இன்னும் அதிகமான வசதிகளுடன் உருவாக்கப்பட்டதே இந்த இன்டிசைன் மென்பொருளாகும்.

பக்க வடிவமைப்பு மட்டுமல்லாமல், வெக்டார் வகையிலான படங்களையும் உருவாக்க இந்த இன்டிசைன் மென்பொருளில் பல வசதிகள் உள்ளன. அத்துடன் தலைப்பு எழுத்துக்களை அழகுபடுத்துவது, பின்புலனாக வண்ணங்களை நிறுத்துவது உள்ளிட்ட ஏராளமான, வரைகலை அம்சங்கள் இன்டிசைனிலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

அச்சுத்துறைக்கென்றே, அச்சுத்துறைக்குத் தேவையான, அதில் பயன்படுத்தப்பட்டுவரும் பல்வேறு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளதாகவும் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அச்சுத்துறையில் தற்போது புழக்கத்தில் உள்ள பாலிமாஸ்டர் வேலைகளிலிருந்து கம்ப்யூட்டர் டூ பிளேட் வகையான வேலைகள் அல்லாமல், நேரடியாக கம்ப்யூட்டர் டூ பிரிண்ட் தருகின்ற டிஜிட்டல் பிரிண்டிங் வரையிலான வேலைகளும் செய்யப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஏற்ற பல செயல்பாடுகள் இன்டிசைனில் உள்ளன.

அத்துடன் தற்போது பெரிய அளவில் பேசப்படுவதுடன், செயல்பாட்டிலும் கொண்டுவரப்பட்டுள்ள ஈ-பப்ளிகேஷன் எனப்படும் மின் பதிப்பு முறைக்குத் தேவையான மின்னூல்களை (-புக்ஸ்) உருவாக்குவதற்கு வேண்டிய பல்வேறு வசதிகள் இந்த இன்டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மின்னூலுக்கு அடிப்படையான போர்டபிள் டாக்குமென்ட் ஃபார்மேட் எனப்படும் பீடிஎஃப் வகை கோப்புகளை உருவாக்குவது என்பது இன்டிசைனில் மிகவும் எளிமைபடுத்தப்பட்டுள்ளது. அதற்காக சிறப்புக் கட்டளைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனந்தவிகடன் குழுமத்தின் அனைத்து இதழ்கள் மற்றும் குமுதம் உள்ளிட்ட பல்வேறு வார இதழ்களும், தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களும் தற்போது இன்டிசைனை பயன்படுத்தியே தங்களது வடிவமைப்பை செய்து முடிக்கின்றனர். மேலும் சென்னையில் கணினி வரைகலை வடிவமைப்பாளர்களிடையே இந்த இன்டிசைன் பெரிய அளவில் புழக்கத்தில் உள்ளது.

2000ஆவது வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இன்டிசைனின் 1வது பதிப்பைத் தொடர்ந்து தற்போது 6வது பதிப்பு இன்டிசைன் சிஎஸ்4 என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. அத்துடன் இதன் 10ஆவது ஆண்டு நிறைவில், 12-04-2010 அன்று 7வது பதிப்பு சிஎஸ் 5 என்றும் வெளியிடப்பட்டு இப்போது சிஎஸ்6 பதிப்பு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அச்சுத்துறைக்கான பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த இன்டிசைனை முறையாக பயின்று பலனடைவதற்காகவே நமது பயிலகம் மூலம் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இந்தப் பயிற்சியின் முடிவில், தற்போது பயன்பாட்டில் உள்ள பேஜ்மேக்கர் மற்றும் கோரல்டிரா ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து இன்டிசைனை மட்டும் பயன்படுத்த முடியும்.

தற்போது பயன்பாட்டில் உள்ள மென்பொருளில் உள்ள குறைபாடுகள் :

- அதிக பக்கங்கள் உள்ள வேலையை சேவ் செய்து வைத்திருந்தால், மறுபடியும் துவக்கம்போது, தொல்லை தருகிறது.

- தானாக பக்க எண்கள் அமைப்பு கொடுப்பது கடினமானது.

- ஒரே வேலையில் வேறு வேறு தொடர்ச்சியான பக்க எண்கள் வரவழைப்பது இயலாது.

- ஒரு முறை நிறுத்திய படத்தை மாற்றுவதற்கு, அல்லது மாற்றங்கள் கொடுப்பதற்கு அதனை டெலிட் செய்துவிட்டு மீண்டும் இம்போர்ட் செய்தே நிறுத்த வேண்டும்.

- நமது வேலையில் உள்ள தவறுகளை அறிய முடியாது.

- வேரியபிள் டேட்டா என்பது மிகவும் குறைவான அளவிலேயே செயல்படுகிறது. இதனால் அடையாள அட்டை போன்ற புகைப்படங்களை இணைக்கும் வேலைகளைச் செய்ய முடிவது இல்லை.

- திரையில் காட்டப்படும் வண்ணங்களும் அச்சில் கிடைக்கும் வண்ணமும் வேறுவேறாக உள்ளன.

- -புக் எனப்படும் மின்னூல் உருவாக்கத்திற்குத் தேவையான பல வசதிகள் கிடையாது. பீடிஎஃப்பாக மட்டும் மாற்ற முடியும். அனிமேஷன் வசதிகள் கொடுக்க முடியாது.

- இணையப் பக்க வடிவமைப்பிற்காக செயல்படுவது சிரமம்.

- ஆட்டோபேக்கப் மற்றும் பேக்கப் நடக்கும்போது வேறு செயல்களைச் செய்ய முடியாது.

- பேக்கப் நடக்கும்போது மின்தடை ஏற்பட்டால் ஃபைலே கரெப்ட்டாகிவிடுவதும் உண்டு. அதாவது செய்து வைத்த வேலை முற்றிலுமாகக் கொட்டுப் போகிறது.

- இரவு வேலையை முடித்துவிட்டு மறுநாள் காலை ஃபைலைத் துவக்கினால் வெள்ளையாக ஒரு பக்கம் மட்டுமே காட்டப்படும் நிலை பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஃபைல் சைஸ் அதே அளவு உள்ளது.

- வேலை செய்து கொண்டிருக்கும்போது டெர்மினேட் ஆனால், அதுவரை செய்தவை டெலிட் ஆகிவிடுகின்றன.

இதுபோன்ற தொல்லைகள் எதுவும் இன்டிசைனில் கிடையாது.

குறிப்பு : நாம் இன்டிசைனை சந்தைப்படுத்துவதற்காகவோ, விளம்பரப்படுத்து வதற்காகவோ அதற்குப் பரிந்து பேசவில்லை. எங்களது புத்தகங்கள் தயாரிப்பு மற்றும் பிற வடிவமைப்புகளை இன்டிசைனிலேயே தயாரிக்கின்றோம். எளிமையாகவும் முழுமையாகவும் உள்ளது. யாமறிந்த மென்பொருட்களில் இன்டிசைனைப் போல எளிதானதெங்கும் காணோம் என்பதாலும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்தினாலும் இதனைக் கொடுக்கின்றோம்.

வடிவமைப்பாளர்கள் கிடைக்காத இந்த நாட்களில், உரிமையாளர்கள் எளிதாக பயிலுவதற்கு இதுவே மிகப் பொருத்தமான மென்பொருளாகும்.