4 ஜூலை, 2012

தினமணி - கலாரசிகன் - 1.7.2012

தினமணி திருச்சி பதிப்பின் செய்தி ஆசிரியர் இரா.சோமசுந்தரம் ஒரு நல்ல பத்திரிகையாளரும், சிறந்த சிறுகதை எழுத்தாளரும் மட்டுமல்ல, அசாத்தியமான படிப்பாளி. புத்தகங்கள் வாசிப்பதில் என்னைப் பொறாமைப்பட வைக்கும் வாசிப்பு அவருடையது. நான் வாசித்த புத்தகங்களை எல்லாம் அவர் படித்திருப்பார். நான் வாசிக்காததையும் படித்திருப்பார்.

என்னிடமிருந்து எஸ்.வையாபுரிப்பிள்ளை எழுதிய "கம்பன் காலம்' புத்தகத்தைப் படிப்பதற்கு வாங்கிச் சென்றிருந்தார். புத்தகத்தைத் திருப்பி அனுப்பியபோது ஒரு கடிதமும் இணைத்திருந்தார்.

ஷேக்ஸ்பியர் நூல்களைப் பதிப்பித்ததுபோல, கம்பராமாயணமும் பதிப்பிக்கப்பட வேண்டும் என்பது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் கருத்து. ஓரளவுக்குக் கம்பகாவியம் முறைப்படுத்தப்பட்டு, தப்பும் தவறும் இல்லாத, பல பதிப்புகள் வெளிவந்துவிட்டன. 


தற்போது, மகாகவி பாரதிக்கும் அதுபோலத் தரமான, யார் வெளியிட்டாலும் ஒன்றேபோல இருப்பதான பதிப்புகள் வெளியாக வேண்டும்.

பாரதி கவிதைகளை யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் என்ற நிலை. சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்றுவிட வேண்டும் என்கிற அவசரத்தில் தப்பும் தவறுமாகப் பல பதிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பெரிய நிறுவனங்களின் பதிப்பிலேயே பல தவறுகள் மண்டிக்கிடக்கின்றன. சில வரிகள் இல்லவே இல்லை. எழுத்துப் பிழை போகட்டும். வார்த்தைப் பிழையுடனும் வெளியிடப்படுகின்றன.''

சோமுவின் கோபமும், ஏக்கமும், ஆதங்கமும் நியாயமானது. பாரதி பாடல்கள் தரப்படுத்தப்பட வேண்டும் (Standardisation) - பிழையில்லாத பதிப்புகள் மட்டுமே கொண்டுவரப்பட வேண்டும். 


நான் சோமுவை வழிமொழிகிறேன்!