23 நவம்பர், 2012


இதுவல்ல நீதி!

First Published : 22 November 2012 12:47 AM IST
"சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்' என்று சொல்வதை விடப் போலித்தனமான ஒன்று இருக்க முடியாது. பணக்காரர்கள், அரசியல் தொடர்புடையவர்கள், அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானவர்கள் ஆகியோருக்கெல்லாம் சட்டத்தின் அணுகுமுறையே வித்தியாசமானது. சராசரிக் குடிமகனிடம் தனது கடமையைச் செய்யும் சட்டம், அவர்களுக்குச் சில விதிவிலக்குகளை வழங்குவதை பல உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
 கடந்த இருபது நாள்களில் நடந்திருக்கும் இருவேறு நிகழ்வுகள், சட்டம் எப்படி அப்பாவிகளின் மீது மட்டுமே பாய்கிறது அல்லது ஏவி விடப்படுகிறது என்பதையும், அதே சட்டம் அரசியல்வாதிகளையும், உயர் பதவிகளில் இருப்பவர்களையும் நெருங்கவே பயப்படுகிறது என்பதையும் வெளிச்சம் போடுகிறது.
 புதுவையில் சிறு தொழில் நடத்தும் ரவி என்பவர் "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பைச் சேர்ந்தவர். இவர் இணையதளத்திலுள்ள தனது "ட்விட்டர்' பக்கத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவைவிடப் பல மடங்கு சொத்து சேர்த்து விட்டிருப்பவர் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் என்று குறிப்பிட்டிருந்தார். இதுவொன்றும் புதிய குற்றச்சாட்டு அல்ல. கடந்த ஏப்ரல் மாதம் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சில ஆவணங்களை இணைத்து கார்த்தி சிதம்பரத்திற்கு ஏர்செல் - மாக்சிஸ் முறைகேட்டில் தொடர்பு உண்டு என்பதுவரை குறிப்பிட்டுப் பிரதமருக்கு ஒரு கடிதமே எழுதியிருந்தார்.
 சுப்பிரமணியன் சுவாமியின்மீது மானநஷ்ட வழக்குப் போடவோ, அவரைக் கைது செய்யச் சொல்லியோ கேட்க கார்த்தி சிதம்பரத்திற்குத் துணிவு இல்லை. ஆனால் பாவம், ரவி என்பவர் அவரும் நண்பர்களும் மட்டுமே பகிர்ந்துகொள்ளும் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்தவுடன் கொதித்தெழுந்து, புதுவைக் காவல்துறையிடம் புகார் கொடுக்க அவர்களும் நன்றி விசுவாசத்துடன் ரவியைக் கைது செய்திருக்கிறார்கள். தனி மனிதரைப் பற்றிய அவதூறைப் பரப்பிய குற்றத்துக்காகத் தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு "66 ஏ'யின் கீழ் ரவி கைது செய்யப்பட்டு, பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
 2008-இல் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டப்பிரிவு செல்லுமா செல்லாதா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இதைத் தொடர அனுமதித்தால் இணையதளத்தில் எதுவுமே பதிவு செய்ய முடியாது, ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியாது என்கிற நிலைமையல்லவா ஏற்பட்டுவிடும்? கார்த்தியின் பெற்றோர்கள் இருவரும் சட்டம் படித்தவர்களாக இருந்தும், குறைந்தபட்சம் சம்பந்தப்பட்டவருக்கு இது தொடர்பாக ஏன் வழக்குத் தொடரக்கூடாது என்று கேட்டுத் தாக்கீது அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா? ஆட்சியும் அதிகாரமும் கையிலிருக்கும் தைரியத்தில், காவல்துறையைத் தனது கைப்பாவையாக்கி ஓர் அப்பாவிக் குடிமகனைக் கைது செய்வது என்ன நியாயம்? சட்டம் அனைவருக்கும் சமமாகவா இருக்கிறது?
 மும்பையில் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே இறந்தது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்தியப் பிரஸ் கௌன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு தனது சமூக வலைதளத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். "நான் ஏன் தாக்கரேவுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை?' என்கிற தலைப்பிலான  அந்தக் கருத்துப் பதிவில், பால் தாக்கரே முன்வைத்த "மண்ணின் மைந்தர் கொள்கை' அரசியல் சட்டத்துக்கும், தேச ஒற்றுமைக்கும் எதிரானது என்கிறார் அவர்.
 அதே பிரச்னையில் ஷஹீன்ததா என்கிற 21 வயதுப் பெண், "பால் தாக்கரேயின் மரணத்துக்காக மும்பை ஸ்தம்பித்ததன் காரணம் அச்சமே தவிர அவர்மீதான மரியாதை அல்ல. இந்த நிலை நம் மீதான திணிப்பு, நமது தேர்வு அல்ல என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்' என்று தனது முகநூலில் கருத்து வெளியிடுகிறார். தனக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு என்று ரேணு சீனிவாசன் என்கிற பெண் ஆமோதித்துப் பதிவு செய்கிறார்.
 சட்டப்பிரிவு 505(2)ன் கீழ் இரு தரப்பினருக்கிடையே பகையையும் வெறுப்பையும் வளர்க்கும் விதத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி மும்பை காவல்துறை ஷஹீன்ததாவையும், ரேணு சீனிவாசனையும் கைது செய்கிறது. இந்தக் கைது விவகாரம் விமர்சனத்துக்கு உள்ளானதால் அவர்கள் ரூ. 15,000 செலுத்திப் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
 இவர்கள்மீது பாய்ந்த சட்டப் பிரிவு 505(2) ஏன் நீதிபதி மார்கண்டேய கட்ஜு மீது பாயவில்லை? இவர்கள் அப்பாவிகள் அதனால்தான் சட்டம் பாய்கிறது.
 அன்றாடம் அரசியல் மேடைகளில் மிகவும் தரக்குறைவாகப் பேசும் அத்தனை பேச்சாளர்கள் மீதும் இந்தச் சட்டம் பாய வேண்டுமே, ஏன் இல்லை? தென்னிந்தியர்கள் மும்பையிலிருந்து வெளியேற வேண்டும் என்று பால் தாக்கரே பேசியபோதும், பிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்று அவரது சகோதரர் மகன் ராஜ் தாக்கரே பேசியபோதும் பாயவில்லையே ஏன்? அப்பாவிகளாக இருந்தால் ஒன்றுமில்லாத விஷயத்தைக்கூடக் குற்றமாக்கி சட்டம் தனது கடமையைச் செய்யும், அப்படித்தானே?
 தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 66 ஏ ஆனாலும், சட்டப்பிரிவு 505(2) ஆனாலும், அவை அரசியல் சட்ட அடிப்படை உரிமையான 19(1)(எ)வுக்கு மேலானதாக இருக்க முடியாது. ஒரு தனிமனிதனின் பேச்சுரிமையையும், கருத்து உரிமையையும் கட்டுப்படுத்த எந்தச் சட்டத்தாலும் முடியாது என்பதால்தான் அதற்கு அடிப்படை உரிமை அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.
 மனத்தில் பட்டதைத் துணிந்து சொல்லும் உரிமைக்குப் பெயர்தான் சுதந்திரம். அதைத்தான் ரவியும், ஷஹீன்ததாவும், ரேணு சீனிவாசனும் செய்தார்கள். சுப்பிரமணியன் சுவாமியும், நீதிபதி மார்கண்டேய கட்ஜு-வும் செய்தார்கள். அவர்கள் எல்லோருமே பாராட்டுக்குரியவர்கள்தான், அவரவர் பாதையில்! ஆனால், சட்டம் ஏன் சமமாக இல்லை  என்பதுதான் வேதனையளிக்கிறது.
 நீதியை நிலைநாட்டுவதற்காக வகுக்கப்பட்ட சட்டம் அநீதிக்குத் துணை போகிறதே, அதுவும் வேதனையளிக்கிறது!
நன்றி : தினமணி, 22.11.2012
http://dinamani.com/editorial/article1349075.ece

6 அக்டோபர், 2012

கணினி வரைகலையின் சங்கமம் - மின்னூல்

கணினி வரைகலையின் சங்கமம் - மாத இதழ் தற்போது மின்னூலாக வெளியிடப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2012 முதல் வெளிவரும் இது தற்போது விலையில்லா மின்னிதழாகத் தரப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பெறுவதற்குப் பின்வரும் வலைதளத்தில் பதிவு செய்து கொண்டால் போதும்.

ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதி உங்களது (பதிவு செய்துள்ள) மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுவிடுகிறது.

இன்டிசைன், கோரல்டிரா, போட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர் உள்ளிட்ட கணினி வரைகலை மென்பொருட்களில் செயல்முறை பயிற்சிகள், குறிப்புகள், சிறப்பு செய்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தரப்படுகின்றன.

அனைத்துப் பக்கங்களும் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன.

பதிவு செய்ய வேண்டிய வலைதளம் : (கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்)

http://veeranathan.com/sangamam.php

உங்கள் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொடுத்தால் போதும். கட்டணம் எதுவும் கிடையாது.

கோவை ஜெ. வீரநாதன் உள்ளிட்ட 16 படைப்பாளிகளுக்கு கு.சி.பா. அறக்கட்டளை விருது அளிப்பு



கோவை பாலாஜி கணினி வரைகலைப் பயிலக ஆசிரியர் திரு. ஜெ. வீரநாதன், சென்னை ஜெம் கிரானைட்ஸ் அதிபர் திரு. வீரமணி அவர்களிடமிருந்து நாமக்கல் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் கணினித் தமிழ் நூல் விருது பெறுகிறார். தினமணி ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன், எழுத்தாளர் திரு. கு. சின்னப்பபாரதி, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வி. சுப்ரமணியன், அறக்கட்டளை தலைவர் மற்றும் கல்லூரி தாளாளர் டாக்டர் பொ. செல்வராஜ் ஆகியோர் உடன் உள்ளனர்.
நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (2.10.2012) நடைபெற்ற விழாவில், கு. சின்னப்பபாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை சார்பில், 16 படைப்பாளிகளுக்கு சிறப்பு விருதும், தலா ரூ.10,000 பொற்கிழியும் வழங்கப்பட்டன.
இந்த இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் முனைவர் பொ.செல்வராஜ் தலைமை வகித்தார்.
உலக சமுதாய சேவா சங்க சேலம் மண்டலத் தலைவர் உழவன் ம.தங்கவேல், சேலம் கட்டடப் பொறியாளர் எஸ்.பி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளைச் செயலர் கா.பழனிச்சாமி தொடக்க உரையாற்றினார். விழாவில், முதன்மை விருதுடன், ரூ.1.50 லட்சம் பொற்கிழி தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்டது. விருதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் வழங்கினார்.

மேலும், சிறந்த நூல்கள் எழுதிய வகையில் சிறுகதைப் பிரிவில் (அடைப்புக் குறிக்குள் நூல்களின் பெயர்கள்), கனடாவைச் சேர்ந்த அகில் என்கிற அகிலேஸ்வரன் சாம்பசிவம் (கூடுகள் சிதைந்த போது), சிங்கப்பூர் மா.அன்பழகன் (என் வானம் நான் மேகம்), கவிதைப் பிரிவில் நாமக்கல் கா.ஜெய்கணேஷ் (நட்பின் முகவரி), பிரான்ஸ் பத்மாராணி இளங்கோவன் (சிறுவர் இலக்கியம்), இலங்கை டாக்டர் ஓ.கே.குணநாதன் (பறக்கும் ஆமை), நாவல் பிரிவில் கன்னியாகுமரி மலர்விழி (தூப்புக்காரி), அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சிங்காரவடிவேல் (ஆத்தா கல்லறையில் ஒரு ஆவாரஞ்செடி), கட்டுரைப் பிரிவில் ஈரோடு புலவர் செ.ராசு (வாழ்நாள் சாதனை விருது), மலேசியா ராஜம் ராஜேந்திரன் (மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்), லண்டன் சிவ.தியாகராஜா (தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்), சிற்றிதழ் பிரிவில் இலங்கை கலாமணி பரணீதரன் (ஜீவநதி), கணினித் தமிழ்ப் பிரிவில் கோவை ஜெ.வீரநாதன் (இணையத்தை அறிவோம்), மொழி பெயர்ப்புப் பிரிவில் திருச்சி இலக்குவன் திருவரங்கம் (இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - இஎம்எஸ் நம்பூதிரிபாட்), சென்னை ஆர்.சௌரிராஜன் (கு.சி.பா. நூல் மொழிபெயர்ப்பு), இலங்கை உபாலி லீலாரத்ன (கு.சி.பா. சர்க்கரை நூல் மொழி பெயர்ப்பு), உஸ்பெகிஸ்தான் லோலா.மக்துபா (கு.சி.பா. நூல் மொழிபெயர்ப்பு) ஆகிய 16 எழுத்தாளர்களுக்கு தலா 10 ஆயிரத்துடன் பொற்கிழியும், விருதும் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி வழங்கினார்.
இந்த விருதுகளுக்கு மொத்தம் 401 படைப்புகள் வரப்பெற்றதில் சிறந்த 16 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டிருப்பதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, விழா மலரை சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் கே.முத்துச்செழியன் வெளியிட, அதை லண்டன் எழுத்தாளர் ரா.உதயணன் பெற்றுக் கொண்டார்.
மேலும், எழுத்தாளர் லோலாமக்துபா உஸ்பெகிஸ்தான் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட கு.சி.பாவின் "பவளாயி' புதினத்தின் முதல் பிரதியை புதுதில்லி மொழி பெயர்ப்பாளர் எச்.பாலசுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார்.

உபாலி லீலாரத்னா சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட கு.சி.பா.வின் "சர்க்கரை' என்னும் புதினத்தின் முதல் பிரதியை இலங்கை கொழுந்து இதழாசிரியர் அந்தனி ஜீவா பெற்றுக் கொண்டார். இவ்விரு புதினங்களையும் நீதிபதி ராமசுப்பிரணியன் வெளியிட்டார். தொடர்ந்து, எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, செல்வம் கல்வி நிறுவனங்களின் செயலர் கவீத்ராநந்தினி பாபு வரவேற்றார்.
அறக்கட்டளை உறுப்பினர் சி.ரங்கசாமி நன்றி கூறினார்.
அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நா.செந்தில்குமார் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
நன்றி : தினமணி, 3.10.2012

4 ஜூலை, 2012

தினமணி - கலாரசிகன் - 1.7.2012

தினமணி திருச்சி பதிப்பின் செய்தி ஆசிரியர் இரா.சோமசுந்தரம் ஒரு நல்ல பத்திரிகையாளரும், சிறந்த சிறுகதை எழுத்தாளரும் மட்டுமல்ல, அசாத்தியமான படிப்பாளி. புத்தகங்கள் வாசிப்பதில் என்னைப் பொறாமைப்பட வைக்கும் வாசிப்பு அவருடையது. நான் வாசித்த புத்தகங்களை எல்லாம் அவர் படித்திருப்பார். நான் வாசிக்காததையும் படித்திருப்பார்.

என்னிடமிருந்து எஸ்.வையாபுரிப்பிள்ளை எழுதிய "கம்பன் காலம்' புத்தகத்தைப் படிப்பதற்கு வாங்கிச் சென்றிருந்தார். புத்தகத்தைத் திருப்பி அனுப்பியபோது ஒரு கடிதமும் இணைத்திருந்தார்.

ஷேக்ஸ்பியர் நூல்களைப் பதிப்பித்ததுபோல, கம்பராமாயணமும் பதிப்பிக்கப்பட வேண்டும் என்பது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் கருத்து. ஓரளவுக்குக் கம்பகாவியம் முறைப்படுத்தப்பட்டு, தப்பும் தவறும் இல்லாத, பல பதிப்புகள் வெளிவந்துவிட்டன. 


தற்போது, மகாகவி பாரதிக்கும் அதுபோலத் தரமான, யார் வெளியிட்டாலும் ஒன்றேபோல இருப்பதான பதிப்புகள் வெளியாக வேண்டும்.

பாரதி கவிதைகளை யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் என்ற நிலை. சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்றுவிட வேண்டும் என்கிற அவசரத்தில் தப்பும் தவறுமாகப் பல பதிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பெரிய நிறுவனங்களின் பதிப்பிலேயே பல தவறுகள் மண்டிக்கிடக்கின்றன. சில வரிகள் இல்லவே இல்லை. எழுத்துப் பிழை போகட்டும். வார்த்தைப் பிழையுடனும் வெளியிடப்படுகின்றன.''

சோமுவின் கோபமும், ஏக்கமும், ஆதங்கமும் நியாயமானது. பாரதி பாடல்கள் தரப்படுத்தப்பட வேண்டும் (Standardisation) - பிழையில்லாத பதிப்புகள் மட்டுமே கொண்டுவரப்பட வேண்டும். 


நான் சோமுவை வழிமொழிகிறேன்!

8 ஜூன், 2012

இதழாளர் பயிற்சி வகுப்பில் உரையாடல்

கடந்த 25.5.2012ம் தேதி சென்னையில் விஜயபாரதம் நிறுவனத்தினர் நடத்திய இதழாளர் பயிற்சி வகுப்பில் இதழ் வடிவமைப்பு என்பது பற்றி உரை நிகழ்த்தும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. அது பற்றிய செய்தியை விஜயபாரதம் இதழில் வெளியிட்டுள்ளனர். இதழின் 4வது அட்டையில் வெளியாகிய படம் :


6 ஜூன், 2012

படைப்புக்கு மரியாதை!

தினமணி தலையங்கம்: படைப்புக்கு மரியாதை! 
First Published : 25 May 2012 01:50:14 AM IST

நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோருக்கு 2012ஆம் ஆண்டு நல்ல காலம் பிறந்திருக்கிறது. படைப்புரிமை சட்டத் திருத்தம்-2012 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுமனதாக நிறைவேறியுள்ளது. திரைப்படத் துறையினரின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம் இது. இதில் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரே விஷயம், இந்த நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் தங்கள் படைப்புக்கு உரிமையாளர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதுதான்.

திரைத்துறையில் ஒரு நடிகர் நடிக்கவும், பாடலாசிரியர் பாட்டு எழுதித் தரவும், இசையமைப்பாளர் இசை அமைத்துக் கொடுக்கவும் அவர்கள் கேட்கும் தொகை தயாரிப்பாளரால் அளிக்கப்பட்டுவிடுவதால், அது தொடர்பாக எந்த உரிமையும் படைப்பாளிகள் அல்லது நடிகர்களுக்கு இல்லை என்பதுதான் படைப்புரிமைச் சட்டம் 1957-ன்படி நடைமுறையாக இருந்தது. இப்போதைய சட்டம் இந்த நடைமுறையில் சிறு திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. திரைப்படத் தயாரிப்பாளர் அந்த திரைப்படத்துக்கு மட்டுமே உரிமை படைத்தவர். அதே திரைப்படம், வானொலியில், தனியார் அல்லது அரசு தொலைக்காட்சியில், இணையதளத்தில், குறுந்தகடுகள் மூலமாக கேபிள் டி.வி.க்களில், சிறு பகுதியாக அல்லது முழுமையாக அல்லது பாடல் மட்டும் என எந்த வகையில் வெளியானாலும், அதற்கான உரிமத்தொகை (ராயல்டி) பெறுவதற்கு இந்தக் காட்சி, பாடல் அல்லது இசைக்குச் சொந்தக்காரர்கள் உரிமை பெற்றவர் ஆகிவிடுகின்றனர்.

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், ஒரு கலைஞன் அல்லது கவிஞன், இசைஞன் காலத்தால் கைவிடப்பட்டாலும், அவன் படைப்பு உயிர்ப்புடன் இருக்கும்வரை அக் கலைஞனுக்கு உரிமத் தொகை மிகச்சிறிய அளவாக இருந்தாலும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்தச் சிறந்த கலைஞன் வறுமையில் சாகமாட்டான். திரைப்படத் துறையில் பணியாற்றியவர்களால் எழுத்துலக படைப்பாளிகள் போல, உரிமத்தொகை பெற முடியாமல் இருந்துவந்த நிலைமை இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.

திரைப்படங்களைப் பொருத்தவரை, அதன் தயாரிப்பாளர் மட்டுமே உரிமை படைத்தவர் என்பதால், அந்தத் திரைப்படம் எத்தனை முறை, எத்தனை தியேட்டர்களில் ஓடினாலும் அவருக்குத்தான் லாபம். அந்தப் படத்தை சில ஆண்டுகள் கழித்து ரீ-பிரிண்ட் போட்டு ஓட்டினாலும் அவருக்கே அந்த லாபம் முழுவதும்.

உதாரணமாக, "கர்ணன்' படத்தை டிஜிட்டலாக மாற்றினாலும் அதன் உரிமை அதன் தயாரிப்பாளருக்கே சொந்தம். அல்லது தயாரிப்பாளரிடமிருந்து உலக விநியோக உரிமையை முழுவதுமாகப் பெற்ற விநியோகஸ்தருக்குச் சொந்தம். இதுதான் இன்று வரை உள்ள நிலைமை. இனி அப்படியல்ல. ஒரு படத்தை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றினாலும், கருப்பு - வெள்ளைப் படத்தை வண்ணமாக மாற்றினாலும், இணைய தளத்தில் வெளியிட்டாலும், அதாவது, திரைக்கு வெளியே எந்த வடிவம் கொண்டாலும், மாற்றம் பெற்றாலும், அதில் தொடர்புடைய கலைஞர்கள் உரிமத்தொகை பெறும் தகுதியுடைவர்கள் ஆகிறார்கள்.

வானொலி, தூர்தர்ஷனில் ஒலி, ஒளிபரப்பாகும் திரைப்பாடல்கள், ஒலிச் சித்திரம், திரைப்படம், நகைச்சுவைத் துணுக்குகள் குறித்து அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் ஆகியன கணக்கு வைத்திருக்கின்றன. இவை பயன்படுத்தப்பட்ட மணித்துளிகளுக்கேற்ப, அதன் தயாரிப்பாளர்களுக்குக் காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசின் இந்த இரு நிறுவனங்களும் பாராட்டுக்குரியவை.

தனியார் தொலைக்காட்சிகள் ஆதிக்கம் பெருகிய பின்னர், படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் தனியார் தொலைக்காட்சிகளே வாங்கி, அப்படத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் - பாடல், நகைச்சுவைக் காட்சி அல்லது முழு திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும், தங்கள் துணை சேனல்களிலும் ஒளிபரப்பும் புதிய வணிக முறை தோன்றியது.

ஒரு படத்தின் தயாரிப்புச் செலவு ரூ.80 கோடி என்றாலும், அந்தப் படத்தை ரூ.100 கோடிக்கு வாங்கி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது அவர்களுக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பல கோடி ரூபாய். இரண்டு ஒளிபரப்பில் இந்த ரூ.100 கோடியை மீட்டுவிட முடியும். ஆகவே, ஒரு படத்தின் பல காட்சிகளை, பாடலை பலமுறை ஒளிபரப்பி, விளம்பரங்கள் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்கத் தனியார் தொலைக்காட்சிகளால் முடிந்தது.

தற்போது இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்திருப்பதன் மூலம், அத்தகைய தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தாங்களே அந்தப் படத்துக்கு உரிமை பெற்றவர்களாக இருந்தாலும்கூட, அதைத் திரையரங்கு அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்துவதால், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு உரிமத் தொகை தந்தே ஆக வேண்டும்.

இவ்வாறு திரை அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்தப்படும்போது, அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப, அதில் தொடர்புடைய கலைஞர்களுக்கும் தரப்பட வேண்டிய உரிமத் தொகையை காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிர்ணயம் செய்யும்போது, தொலைக்காட்சிகளைப் பொருத்தவரை, அக்காட்சிகள் இடம்பெறும் ஸ்லாட்-ன் மொத்த விளம்பர வருவாயையும் கணக்கில்கொண்டு அதற்கேற்ப உரிமத்தொகையை (ராயல்டி) நிர்ணயிக்க வகை செய்தால், கலைஞர்களுக்கு ஓரளவு நியாயமான உரிமத்தொகை கிடைக்கும்.

படங்களை ரீ-மேக் செய்யும்போதும், பாடல்களை ரீ-மிக்ஸ் செய்யும்போதும்கூட தொடர்புடைய கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்களின் அனுமதி பெறவும் உரிமத்தொகை தரவும் வேண்டும் என்கின்றது சட்டம். திரைத்துறையினரை மனதில் கொண்டே இந்தச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்திற்குப் பெயர் வைப்பதிலிருந்து புதிய கதை கருவைத் தேடிப்பிடித்துப் படமாக்குவது வரை, கற்பனை வறட்சி ஏற்பட்டிருக்கிறது. புதிய கதையைப் படமாக்கும் துணிவு இல்லாத போக்கு தலைதூக்கி இருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் வந்திருப்பது சுயசிந்தனையாளர்களின் திறமைக்குத் தரப்படும் மரியாதை. இருப்பினும் திரைத்துறையினரின் ஒற்றுமை மட்டுமே இந்தச் சட்டத்தை வலுவாக்கும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.