3 பிப்ரவரி, 2014

கட்டற்ற மென்பொருள் ஜிம்ப் 2.8

கம்ப்யூட்டர் நூல் வரிசை கட்டற்ற மென்பொருள் ஜிம்ப் 2.8
"எளிய தமிழில் எல்லோரும் பயில'' என்ற உயரிய நோக்கத்துடன், கம்ப்யூட்டர் கல்விப் பிரிவில் செயல் பட்டு வரும், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் ஜிம்ப் புரோகிராமின், இன்றைய மேம்படுத்தப்பட்ட பதிப்பான ஜிம்ப் 2.8 குறித்து வழிகாட்டி நூல் ஒன்றை, ""கட்டற்ற மென்பொருள் ஜிம்ப் 2.8'' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இதனை எழுதிய ஆசிரியர் ஜெ.வீரநாதன்.

ஏ4 அளவில், 142 பக்கங்களில் அமைந்துள்ள இந்த நூல், ஜிம்ப் சாப்ட்வேர் தொகுப்பிற்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைந்துள்ளது. போட்டோ எடிட் செய்வதனைத் தொழில் முறையில் மேற்கொள்வோர் பலரும் பயன்படுத்துவது அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷாப் சாப்ட்வேர் தொகுப்பினையே. போட்டோ ஷாப் குறித்தும் இதே ஆசிரியர் நூல் எழுதியுள்ளதால், இந்நூலின் தொடக்கத்திலேயே, மிகத் தெளிவாக, இரண்டு சாப்ட்வேர் தொகுப்புகளையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். இந்த புரோகிராமில் கூடுதலாகக் கிடைக்கும் வசதிகளைப் பட்டியலிட்டுள்ளார். ஜிம்ப் குறித்த அறிமுகப் பக்கங்களுக்குப் பின், அதன் டூல்ஸ் பற்றி, மூன்று பிரிவுகளில் விளக்கங்கள் தரப்படுகின்றன. தொடர்ந்து மெனுக்கள், கட்டளைகள், வண்ணங்கள் எனப் பல பிரிவுகளில், இந்த தொகுப்பின் செயல்பாடுகள், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலுடன் இந்நூல் மற்றும் இந்த மென்பொருள் குறித்த சி.டி. ஒன்று இலவசமாகத் தரப்படுகிறது. விருப்பமிருந்தால் பெற்றுக் கொள்ளலாம்.
ஜிம்ப் ஒரு கட்டற்ற மென்பொருள் என்பதால், இணையத்திலிருந்து நாம் தரவிறக்கம் செய்யக் கூடியதனை, இந்நூலாசிரியரே நமக்கு இந்நூலுடன் சிடியாக, இலவசமாக வழங்குகிறார். எனவே, நாம் இந்த மென்பொருளைப் பெற இணையம் செல்ல வேண்டியதில்லை. மென்பொருள் சி.டி.யில் உள்ள தனி போல்டரில் அதன் செட் அப் பைல்கள் இரண்டுடன் தரப்பட்டுள்ளது. இன்னொரு போல்டரில், அனிமேஷன் காட்சிகள் சில எடுத்துக்காட்டுகளாய் தரப்பட்டுள்ளன. இந்த சிடியில், இந்நூல் முழுமையாக பி.டி.எப். பார்மட்டில் தரப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் கம்ப்யூட்டரில் ஜிம்ப் மென்பொருளை இயக்குகையில், தனியே நூலினைப் புரட்டிப் பார்க்க வேண்டியதில்லை. இது பி.டி.எப். வடிவில் தரப்பட்டுள்ளது. பி.டி.எப்.பைல்களைப் படிப் பதற்கான அடோப் அக்ரோபட் ரீடர் பதிப்பு 5 முழுமையாகத் தரப்பட்டுள்ளது. அதனை இந்த சிடியில் இருந்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளலாம்.
இந்த சிடியில் தரப்பட்டுள்ளவற்றில் ஒரு சிறப்பான அம்சம் இதில் தரப்பட்டுள்ள வீடியோ விளக்கங்களாகும். ஓர் ஆசிரியர் வகுப்பறையில் விளக்கும் வகையில், மென்பொருள் இயக்கத்தின் சில செயல்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் நான்கு வீடியோ பாட பைல்கள் உள்ளன. 
மேலே சொல்லப்பட்ட சி.டி.யுடன் சேர்ந்து இந்த நூல் ரூ.190 விலையிடப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 167, முதல் தளம், போலீஸ் கந்தசாமி வீதி, இராமநாதபுரம், கோயம்புத்தூர் 641045. தொலைபேசி எண் 0422 2323228 / 98422 13782.
நன்றி - தினமலர், 3.2.2014 Web : http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19119&ncat=4